ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Wednesday 23 March 2016

சைவத்தின் மாமந்திரம்



சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.
சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,
கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,
நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்
நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.
மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.
ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே
என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.
மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.
“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும், ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும். ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும், ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.
சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே. முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

எப்போது ஓதலாம்?
 எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.

குழந்தைகளுக்குப் பெயர்
நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.
நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

Tuesday 22 March 2016

சைவர்களின் கோவில்

 







சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம். சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.
ஸ்ரீ நடராஜரை பழங்கால இலக்கியங்களில் சிறப்புற்றதாக விளங்கும் சிலப்பதிகாரம் (நடராஜர் ஆடிய கொடுகொட்டிக் கூத்து: (28: 67 - 75) - "திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறையாற்பவும் .... இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்") முதற்கொண்டு பல்வேறு இலக்கியங்கள், பாசுரங்கள், பதிகங்கள் அனைத்தும் போற்றி பறைசாற்றுகின்றன. பிற்காலத்தில் எழுதப்பட்ட பாடல்களிலும் ஸ்ரீ நடராஜரின் தாண்டவங்களை விவரித்துச் சொன்ன பாசுரங்கள் மக்களிடம் மிக எளிதில் சென்றடைந்தன. நாம் இங்கு காணவிருப்பது பிற்காலத்தில் எழுதப்பட்ட, நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது.
மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.
ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.
பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ, மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ, பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த
 குரு நீ, புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன், ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)
பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(ஸ்ரீ நடராஜரின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்தும் பாடலாக அமைந்தது)
[நடராஜரின் நடனத்தை நம் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடலை இங்கு ஆடியோவில் கேட்கலாம்]
பாடல் : 3
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)
பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்)
பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே, வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)
பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்)
பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)
பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை யென்றனோ தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்)
பாடல் 9 :
தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் 10 :
இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ, ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி, கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜ பத்து பாடல்களைப் பாடி, நடராஜரைப் பணிந்து நற்கதி அடைவோம்.