இறைவன் ஒளிமயமானவன்.
அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது,
வணங்குவது என்பது பொதுவாக மனிதர்களுக்கு கடினமாய்த் தென்பட்டது.
ஆகவே அந்த ஒளியை
எளிதாய் வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்க ளில் உலகின் பல
பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர் களின்
முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய
திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.
ஜோதிர்லிங்க வழிபாடானது
துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஆரம்பித்து
வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆக, முழுமுதற் கடவுளாம்
சிவனை - ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம்
செய்வது அவருடைய வழி பாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும்
ஒருமுகப்படுத்தும் முறையே இராஜ யோக தியானம் எனப்படுகிறது. மனித ஆத்மாக்கள்
அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்); ஜோதி சொரூபமாய்
விளங்கு பவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து
தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து, அமைதியும் அன்பும் ஆனந்தமும்
பொங்கி வழியும்; புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே
இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம்
என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும்
இருண்ட- துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
12 ஜோதிர்லிங்கங்கள்
1) காசி விஷ்வநாதர் (வாரணாசி- உத்திர பிரதேசம்)
பாரதத்தின் அனைத்து
தீர்த்த தலங்களிலும் தலைசிறந்தது காசி.
பரமாத்மா சிவன் இந்த புனித தலத்தைத் தனது திரிசூலத்திலிருந்து நேரடியாகப்
படைத்தார் எனவும்; பிறகு பிரம்மாவுக்கு உலக சிருஷ்டியை ஆரம்பிக்கு மாறு
கூறியதாகவும் சிவபுராணம் கூறுகிறது. இந்த தலம் கர்மத்தின் தீய கணக்கினை
அழிக்கக்கூடியது எனவும்; அனைவருக்கும் முக்தி அளிக்கக்கூடிய சிவலிங்கத்தை சிவனே
படைத்ததாகவும் கூறப்படு கிறது. உலகத்தையே படைக்கும் காரியத்தைச் செய்வித்ததால்
அங்குள்ள லிங்கமே விஷ்வநாத் என்றழைக்கப்படுகிறது.
2) மல்லிகார்ஜுனர்
(ஸ்ரீசைலம்- ஆந்திரா)
இங்குள்ள மூலவர் எட்டு
அங்குல உயரத்தில் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த தலத்தில்
ஜோதிர்லிங்கம் என்ற பெயரில் 11 வேறு கோவில்களும் உள்ளன. இக்கோவிலுக்குப் பின்னால்
சிறிய குன்றின்மேல் பார்வதி கோவில் ஒன்றும் உண்டு. இத்தேவி இங்கு மல்லிகாதேவி என
அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சிவனின் பெயர் அர்ஜுனன். எனவேதான் இங்குள்ள மூலவரை
மல்லிகார்ஜுனர் என்றழைக்கிறோம்.
3) ஓங்காரேசுவரர்
(மத்தியப் பிரதேசம்)
இங்குள்ள சிறப்பு
யாதெனில், இங்கே ஓங்காரேசுவரர் மற்றும் பரமேஷ்வர் என்னும் இரண்டு ஜோதிர்லிங்கங்கள்
உண்டு. அமலேஷ்வர் என்கிற வேறு பெயரும் உண்டு. இக்கோவிலுக்கு சற்று தூரத்தில்
நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு சற்று தூரத்தில்
மீண்டும் ஒன்றாக இணைந்து விடுகிறது. இடைப்பட்ட தீவுப் பகுதியில்தான் இத்திருத்த
லம் அமைந்துள்ளது. இரண்டாகப் பிரிந்தோ டும்போது ஒன்று நர்மதா எனவும், மற்றொன்று
காவேரி எனவும் அழைக் கப்படுகிறது. இத்தீவில் தான் மகாராஜா மாங்கதன் இறைவனை வேண்டி
நின்றதாகவும், அதற்கு இறைவன் காட்சியளித்து அருள்புரிந்ததால் அவரது பெயரே
இத்தீவிற்கும் சூட்டப்பட்டு மாங்கத தீவு என்றழைக்கப்படுகிறது.
4) சோமநாதர் (குஜராத்)
ஜோதிர்லிங்க
வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம். இந்த ஜோதிர் லிங்கத்தைப்
பிரதிஷ்டை செய்த சந்திர பகவான், சிவனை வேண்டி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இறைவனும் அவரது தவத்தை மெச்சி வரம் அளித்தார். எனவேதான் இந்த லிங்கம் சந்திரன்
பெயரால் (சோமன்-சந்திரன்) வழங்கி வருகிறது. இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தின் மூலமே
மனிதர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். மேலும் மேலும் மனம்
நிறைந்த பலன்களை அடைந்து, மரணத்திற்குப்பின் சொர்க்கத்தையும் அடைவதாகக்
கூறப்படுகிறது. அரபிக்கடல் ஓரத்தில் இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
5) இராமநாதசுவாமி
(இராமேஸ்வரம்- தமிழ்நாடு)
பாரதத்தின் தெற்கு
ஓரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் இராமேஸ்வரம்.
ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது. பிரதான மூர்த்தி
இராமநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். இந்த லிங்க மூர்த்திக்கு கங்கை நீரை
அபிஷேகம் செய்து, இத்தலத்திலுள்ள மண்ணை எடுத்து கங்கையில் கரைப்பது விசேஷம்.
எனவேதான் வடநாட்டு யாத்ரீகர்கள் நிறையபேர் இங்கு வருகின்றனர்.
இங்குள்ள 22
தீர்த்தங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் நீராடவில்லையெனில் இராமேஸ்வர
யாத்திரை நிறைவு பெறாது என்றே கூற வேண்டும். இறுதி தீர்த்தமான கோடி தீர்த்தத்தில்
நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அக்னி தீர்த்தம் என்ற
பெயரில் வங்கக்கடல் விளங்குகிறது.
6) நாகேஸ்வரர் (துவாரகா, குஜராத்).
இங்கு மூலவர்
நாகேஸ்வரர் என்றும்; பார்வதி தேவி நாகேஸ்வரி என்றும் பூஜிக்கப்படுகின்றனர். இன்று
இந்த ஜோதிர்லிங்கம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.ஒரு நடைபாதை பாலத்தின் மூலமே இக்குகையைச்
சென்றடைய முடியும்.
7) கேதார்நாத்
(உத்திரகாண்டம், உத்திர பிரதேசம்)
பன்னிரு ஜோதிர்லிங்கத்
தலங்களிலும் இயற்கையின் எழில் சூழ்ந்த அழகுமிக்க தலம் கேதார்நாத் ஆகும். மந்தாகினி
நதிக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இத்தலத்தைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகள்
சூழ்ந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி. இந்த இமாலய மலைத் தொடரிலிருந்துதான்
மந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடி வருகிறது. இங்குள்ள கேதாரேஷ்வர் மற்றும் பத்ரி
நாராயணரை பக்திச் சிரத்தையுடன் வழிபடுவோருக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள்
விலகிப் போகும்; எண்ணங்கள் பூர்த்தியாகும் என சிவபுராணம் கூறுகிறது. மேலும் இந்த
யாத்திரையின்போது மரணம் எய்துவோருக்கு மோட்சம் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.
கேதார்நாத்திற்கு
விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் மிக அவசியமாக நேபாளத்திலுள்ள பசுபதிநாத் மூலவரையும்
சென்று தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். ஏனெனில் பரமனின் தலைப்பாகம் பசுபதி நாத்
என்றும்; பாதப்பகுதி கேதார்நாத் என்றும் கூறப்படுகிறது.
8) மகாகாளேஸ்வர்
(உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்)
உஜ்ஜயினி என்றும்
அவந்திகா என்றும் அழைக்கப்படும் நகரம் சிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த
நதி பகவான் விஷ்ணுவின் சரீரத்திலிருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம் சிம்ம ராசியில் வரும்போது, வைகாசி
விசாகத்தின் போது இங்கு மகாமகம் நடைபெறுகிறது.
இரு பிரிவுகளாக
வளர்ந்து நிற்கிறது மகா காளேஸ்வர் கோவில். மேல் தளத்தில் ஓங்காரேஸ்வர் சிவலிங்கம்
பிரதிஷ்டையாகியுள்ளது. கீழ்ப்பகுதியில் மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது.
இந்த சிவனைத் தரிசனம் செய்வதால் ஒருவருக்கு கனவில்கூட துக்கம் ஏற்படாது என்றும்;
எந்தெந்த ஆசைகளுடன் பூஜை செய்கின்றனரோ அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்றும்
கூறப்படுகிறது.
9) வைத்தியநாதேஸ்வரர்
(பரளி, மகாராஷ்டிரா)
ஔரங்காபாத்திற்கு
அருகில் பாபானி ரயில் நிலையத்தருகில் பரளி வைத்திய நாதேஸ்வரர் கோவில்
அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கமானது கைலாசத்திலிருந்து இராவணனால் கொண்டு வரப்பட்டது
என்று கருதப்படுகிறது. இந்த லிங்கம் சிறு மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
இக்குன்றில் எவரது
சடலம் எரியூட்டப் படுகிறதோ, அவர்கள் நேரடியாக மோட்சம் செல்வார்கள் என்று
கூறப்படுகிறது. எனவே பெருவாரியான மக்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை இங்கே
கொண்டு வந்து தகனகிரியை செய்தனர். இந்த வழக்கம் சென்ற நூறு ஆண்டு களுக்கு முன்பு
வரை இருந்து வந்தது. எனவே இந்த தலம் தகன பூமியின் பேரால் மிகவும் பிரபல
மடைந்துள்ளது. இதைப் பின்பற்றி பாரதத்தின் பிற நகரங்களிலும்கூட தகன பூமியில்
சிவபெருமானின் கோவில் (சுடலை காப்பவர்) அமைத்துள்ளனர்.
10) குகமேசம்
(கிருஷ்ணேஷ்வர்- மகாராஷ்ட்ரா)
வடமொழியில் குஷ்மேஷ்வர்
என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனின் பெயர் கிருஷ்ணேசுவரர்
ஆகும். ஔரங்காபாத் மற்றும் தௌலதாபாத் நிலையங்களுக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளுக்கருகில் இக்கோவில்
அமைந்துள்ளது.
11) திரியம்பகேஸ்வரர்
(மகாராஷ்ட்ரா)
நாசிக் ரோடு அருகில்,
பிரம்மகிரி மலையில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இக்கோவில்
அமைந்துள்ளது. இக்கோவில் மிகப்பெரிய நிலப்பரப்பில், நாலாபுறமும் மிக உயர்ந்த மதில்
சுவர்களுடன் அமைந்துள்ளது. உள்பிராகாரத் தில் மூன்று லிங்கங்கள் உள்ளன. இவை
பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பிரதிமைகள் என்று கூறப்படு கின்றன. இந்த
ஜோதிர்லிங்கங்களைத் தொட்டு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில்
அமிர்த குண்டம் என்னும் பெயரால் புஷ்கரணி (திருக்குளம்) உள்ளது.
12) பீமா சங்கர்
(அருணாசலபிரதேசம்)
கும்பகர்ணனின் மகனான
பீம சூரன் அனைவருக்கும் பெருந்துன்பம் விளைத்தான். அப்போது சிவன் தோன்றி சூலத்தால்
பீம சூரனை வதம் செய்தார். அந்த சாம்பலிலிருந்து அநேக காரியங்களுக்குப் பயன்படும்
மருந்து வகைகள் உற்பத்தியாயின என்றும்; "பூதம், பேய், பிசாசு போன்றவற்றை விரட்ட
வல்லது என்றும் கூறப் படுகிறது.
"தேவர்கள்,
முனிவர்கள், மக்களுடைய பாதுகாப் பின் பொருட்டு, யுத்தம் செய்யாதோருக்கும் துன்பம்
விளைவிக்கக்கூடிய இந்த மண்ணில், தாங்கள் அவசியம் இருந்து காத்தருள வேண்டும்'
என்கிற பிரார்த்தனையின்பேரில் பீமாசங்கர் என்னும் பெயரில் ஈசன் இங்கு கோவில்
கொண்டார்.