ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Tuesday, 28 February 2017

சைவர் சிவநெறி

 (சைவர்களாக இருந்தால் ஒழுகவேண்டிய நெறிமுறைகள் )
வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களே நமது சைவசமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்க ளாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின் படியே நடக்கவேண்டும். நடவாதார் சைவத்திற்குப் புறம்பானவராவர்.
இந்தியப் பேரரசின் அடிப்படைச் சட்டம், அரசியலமைப்பு என்று சொல்லப்பெறும். இந்தியப் பேரரசின் மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்பு என்னும் இந்த அடிப்படைச் சட்டத்தைப் போற்றி மதித்தே நடந்துகொள்ள வேண்டும்.
அதைப்போலவேதான், சைவத்தின் அடிப்படைச் சட்டமாக விளங்குவது, வேதாகம, புராணதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களாகும். ஆகவே இவற்றைப் போற்றியும், மதித்தும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே விதியாகும்.
அவரவர்களும் மனம் போன போக்கெல்லாம் போய்த் தனிவழி காண்பார்களானால் நாட்டின் ஒழுங்குமுறை கெட்டுச் சிதறிப் போக ஏதுவாகும். இதைச் சைவர்கள் அனைவரும் உணர்ந்து ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
வேதம், ஆகமம் இரண்டுமே சிவபெருமானிடமிருந்து ஆன்மாக்களை நன்னெறி செலுத்தற் பொருட்டு வந்தவை என்பதையே அறிவிக்கும். இதை "மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்" என உபநிடதம் கூறுகிறது.
வேதம் என்ற சொல், வித் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. வேதம் என்பதற்கு அறிவுநூல் என்பதே பொருள்.
அறிவுநூலாகிய வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாக விளங்குகிறது.
வேதங்களின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான், வேதங்கள் நமக்குத் தெளிவா கப்புரியும்.
வேதம் பற்றித் திருமூலர் அருள்வது காண்க.
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (தி.10 பா.96)
ஆகமம்: ஆ என்பது, ஈசுவரனைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; கமம் என்பது, வந்தது என்பதைக் குறிக்கும். எனவே ஈசுவர னிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பதாகும். ஆகமங்கள் இருபத்தெட்டாகும். வேதம் நான்கும் பரமேசு வரனின் நான்கு முகங்களிலிருந்து தோன்றின என்பர்; ஆகமங்கள் இருபத்தெட்டும் பரமேசுவரனின் உச்சி முகத்தினின்றும் தோன்றின என்றும் திருமூலர் (தி.10 த.3) குறிப்பிடுகிறார்.
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (தி.10 பா.102) திருமூலர்
பூரணனாகிய பெருமானிடமிருந்து வந்தமையால் பூரணம் என வழங்கி, பின்னர் அச்சொல்லே புராணம் எனத் திரிந்தது என்றும் கூறுவர். புராபிநவம் - பூரணம் எனக் கொண்டு, புராதனமாயும் புதுமை யாயும் உள்ளது எதுவோ, அதுவே புராணம் என்று ஆயிற்று என்றும் கொள்வர்.
"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (தி.8 ப.7 பா.9) என்னும் மணிவாசகரின் திருவாசகமே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் பழமையிலிருந்துதான் புதுமை தோன்ற முடியும் என்பதையும் ஊன்றி உணர்வோர் இவ்வுண்மையை உணர்வர்.
வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றன போலப் பதினெண் புராணங்களும் அவ்விறைவன் திருவுள்ளப் பாங்கின்படியே தோன்றலாயின என்பதைத் திருஞானசம்பந்தர், திருவையாறு தேவாரத் திருப்பதிகத்தில்,
மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)
பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் வேத, சிவாகம, புராண, இதிகாசக் கருத்துக்களையே தெளிவாகத் தூய இனிய தெய்வத் தமிழில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், இறையருளால் சமயாசாரியர், சந்தானாசாரியர் உள்ளிட்ட நாயன்மார்கள் வாயிலாகத் தோன்றியவை. இத்திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் இல்லையேல் வேதம், சிவாகமம், புராணங்களைப் பற்றிப் பொது மக்களும், புலவர்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். வேதம், சிவாகமம், புராணங்கள் இல்லையென்றால் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் தோன்றுவ தற்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
எனவே வேத, சிவாகம, புராண இதிகாசக் கருத்துகளைத்தாம், திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் பல கோணங்களினின்று பார்த்து, அவற்றின் செம்பொருளை நமக்குப் பக்குவமாக உணர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் செந்நெறி நிற்க விரும்புவோர் கைக்கொண்டு பயன் பெறுவரே அன்றிக் கைவிடார்.
உதிவிய நூல் :-
குருமகாசந்நிதானம் ஆசியுரையில் இருந்து
பன்னிரண்டாம் திருமுறை - தருமை ஆதீனப் பதிப்பு
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
நம : பார்வதீ பதயே! ஹர ஹர மகா தேவ !!

Tuesday, 14 February 2017

சதுரகிரி -பூலோக கைலாயம் -சித்தர்களின் சொர்க்கபுரி

                                                                                    

1.அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே `என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

2.பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்..இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

3.பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.சட்டை நாதர் குகை ஒன்று உள்ளது ...அமைதியான சூழல் மனம் லகிக்கிறது . மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

4.இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது..அருமையான அனுபவங்களை பெறலாம் செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

5.சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. .மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

6.மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது...

7.சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்ததால் .-இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது .

8.மதுரையிலிருந்து மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது . இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர் ..முதன்முறை செல்பவர்கள் - கூட்டம் அதிகமாக இருக்கும் தினங்களை தவிர்த்து சாதாரன சனி , ஞாயிறு கிழமைகளில் செல்வது உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.

9.மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்....

10.வயதான பெரியோர்கள் பலர் சிவநாமம் ஜெபித்தபடி பக்தி பரவசத்தோடு கையில் கோலின்றி வருவது மெய் சிலிர்க்க செய்கிறது .. எனது கையில் உள்ள குச்சி ...நான் இரவில் நடந்து செல்லும் போது ஒரு நல்ல வழிகாட்டியாய் ,பக்கபலமாய்,பாதுகாப்பு கருவியாய்,உற்றுழி உதவும் நண்பனை போல் இருந்தது ..என்னால் அந்த குச்சியை விட்டுவர மனமில்லாமல் நன்றி உணர்வோடு அடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் வைத்து வணங்கி வந்தேன்...அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டிய அற்புதத் திருத்தலம்