ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Tuesday, 28 February 2017

சைவர் சிவநெறி

 (சைவர்களாக இருந்தால் ஒழுகவேண்டிய நெறிமுறைகள் )
வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களே நமது சைவசமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்க ளாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின் படியே நடக்கவேண்டும். நடவாதார் சைவத்திற்குப் புறம்பானவராவர்.
இந்தியப் பேரரசின் அடிப்படைச் சட்டம், அரசியலமைப்பு என்று சொல்லப்பெறும். இந்தியப் பேரரசின் மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்பு என்னும் இந்த அடிப்படைச் சட்டத்தைப் போற்றி மதித்தே நடந்துகொள்ள வேண்டும்.
அதைப்போலவேதான், சைவத்தின் அடிப்படைச் சட்டமாக விளங்குவது, வேதாகம, புராணதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களாகும். ஆகவே இவற்றைப் போற்றியும், மதித்தும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே விதியாகும்.
அவரவர்களும் மனம் போன போக்கெல்லாம் போய்த் தனிவழி காண்பார்களானால் நாட்டின் ஒழுங்குமுறை கெட்டுச் சிதறிப் போக ஏதுவாகும். இதைச் சைவர்கள் அனைவரும் உணர்ந்து ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
வேதம், ஆகமம் இரண்டுமே சிவபெருமானிடமிருந்து ஆன்மாக்களை நன்னெறி செலுத்தற் பொருட்டு வந்தவை என்பதையே அறிவிக்கும். இதை "மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்" என உபநிடதம் கூறுகிறது.
வேதம் என்ற சொல், வித் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. வேதம் என்பதற்கு அறிவுநூல் என்பதே பொருள்.
அறிவுநூலாகிய வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாக விளங்குகிறது.
வேதங்களின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான், வேதங்கள் நமக்குத் தெளிவா கப்புரியும்.
வேதம் பற்றித் திருமூலர் அருள்வது காண்க.
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (தி.10 பா.96)
ஆகமம்: ஆ என்பது, ஈசுவரனைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; கமம் என்பது, வந்தது என்பதைக் குறிக்கும். எனவே ஈசுவர னிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பதாகும். ஆகமங்கள் இருபத்தெட்டாகும். வேதம் நான்கும் பரமேசு வரனின் நான்கு முகங்களிலிருந்து தோன்றின என்பர்; ஆகமங்கள் இருபத்தெட்டும் பரமேசுவரனின் உச்சி முகத்தினின்றும் தோன்றின என்றும் திருமூலர் (தி.10 த.3) குறிப்பிடுகிறார்.
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (தி.10 பா.102) திருமூலர்
பூரணனாகிய பெருமானிடமிருந்து வந்தமையால் பூரணம் என வழங்கி, பின்னர் அச்சொல்லே புராணம் எனத் திரிந்தது என்றும் கூறுவர். புராபிநவம் - பூரணம் எனக் கொண்டு, புராதனமாயும் புதுமை யாயும் உள்ளது எதுவோ, அதுவே புராணம் என்று ஆயிற்று என்றும் கொள்வர்.
"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (தி.8 ப.7 பா.9) என்னும் மணிவாசகரின் திருவாசகமே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் பழமையிலிருந்துதான் புதுமை தோன்ற முடியும் என்பதையும் ஊன்றி உணர்வோர் இவ்வுண்மையை உணர்வர்.
வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றன போலப் பதினெண் புராணங்களும் அவ்விறைவன் திருவுள்ளப் பாங்கின்படியே தோன்றலாயின என்பதைத் திருஞானசம்பந்தர், திருவையாறு தேவாரத் திருப்பதிகத்தில்,
மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)
பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் வேத, சிவாகம, புராண, இதிகாசக் கருத்துக்களையே தெளிவாகத் தூய இனிய தெய்வத் தமிழில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், இறையருளால் சமயாசாரியர், சந்தானாசாரியர் உள்ளிட்ட நாயன்மார்கள் வாயிலாகத் தோன்றியவை. இத்திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் இல்லையேல் வேதம், சிவாகமம், புராணங்களைப் பற்றிப் பொது மக்களும், புலவர்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். வேதம், சிவாகமம், புராணங்கள் இல்லையென்றால் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் தோன்றுவ தற்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
எனவே வேத, சிவாகம, புராண இதிகாசக் கருத்துகளைத்தாம், திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் பல கோணங்களினின்று பார்த்து, அவற்றின் செம்பொருளை நமக்குப் பக்குவமாக உணர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் செந்நெறி நிற்க விரும்புவோர் கைக்கொண்டு பயன் பெறுவரே அன்றிக் கைவிடார்.
உதிவிய நூல் :-
குருமகாசந்நிதானம் ஆசியுரையில் இருந்து
பன்னிரண்டாம் திருமுறை - தருமை ஆதீனப் பதிப்பு
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
நம : பார்வதீ பதயே! ஹர ஹர மகா தேவ !!

Tuesday, 14 February 2017

சதுரகிரி -பூலோக கைலாயம் -சித்தர்களின் சொர்க்கபுரி

                                                                                    

1.அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே `என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

2.பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்..இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

3.பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.சட்டை நாதர் குகை ஒன்று உள்ளது ...அமைதியான சூழல் மனம் லகிக்கிறது . மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

4.இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது..அருமையான அனுபவங்களை பெறலாம் செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

5.சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. .மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

6.மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது...

7.சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்ததால் .-இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது .

8.மதுரையிலிருந்து மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது . இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர் ..முதன்முறை செல்பவர்கள் - கூட்டம் அதிகமாக இருக்கும் தினங்களை தவிர்த்து சாதாரன சனி , ஞாயிறு கிழமைகளில் செல்வது உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.

9.மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்....

10.வயதான பெரியோர்கள் பலர் சிவநாமம் ஜெபித்தபடி பக்தி பரவசத்தோடு கையில் கோலின்றி வருவது மெய் சிலிர்க்க செய்கிறது .. எனது கையில் உள்ள குச்சி ...நான் இரவில் நடந்து செல்லும் போது ஒரு நல்ல வழிகாட்டியாய் ,பக்கபலமாய்,பாதுகாப்பு கருவியாய்,உற்றுழி உதவும் நண்பனை போல் இருந்தது ..என்னால் அந்த குச்சியை விட்டுவர மனமில்லாமல் நன்றி உணர்வோடு அடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் வைத்து வணங்கி வந்தேன்...அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டிய அற்புதத் திருத்தலம்

Saturday, 19 November 2016

திருண்ணாமலை – அண்ணாமலையார்

Image result for அண்ணாமலை
கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்த வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்
                                                 
*லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு, முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்: காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்
அண்ணாமலை பெயர்க் காரணம்அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை : கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.
 
                                     
இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது. இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.
தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.
கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.
இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.
அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.
ஒருநாள் மட்டும் தரிசனம்சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “”ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்”  தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.
                                                    
அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பெருமாளும் ஜோதி வடிவில்!: பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள “வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்தூர விநாயகர்ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். 
இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமைமாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே!: கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், “கம்பத்திளையனார்’ (கம்பம்  தூண், இளையனார்  முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
ஆணவம் அடக்கும் பைரவர்இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நான்கு முகத்துடன் லிங்கம்பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
பாதாள லிங்கம்மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், “பாதாள லிங்கம்’ இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரி யோகீசர்அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்து விட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். “கிளி கோபுரம்’ என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை “அருணகிரி யோகேசர்’ என்கிறார்கள்.

விநாயகரின் முதல்படைவீடுமுருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.
இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர், முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன்.
அவன் வழிபட்டுவந்த காளிதேவிதான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று, முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர், அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில், மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி.
திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில் என்றாலும், எழிலுருவுடன் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி!
மகாதீபம்:மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக அண்ணாமலைக்கு அரோஹரா எனக்கூறி தரிசனம் கண்டபின் இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் கோயிலில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இக்கோயில் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!
தல வரலாறு: விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.
சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே  தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.
பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.
அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.