ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Friday, 12 October 2018

ஆவுடையார்.......

தென்நாடுடைய  சிவனே போற்றி!!
எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!!



இத்தலம் தமிழ்நாட்டில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை பட்டுக்கோட்டை, காரைக்குடி, முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் திருப்பெருந்துறை என்று கூறப்பட்டிருக்கிறது. தற்பொழுது ஆவுடையார் கோவில் என்றே வழங்கப்படுகிறது. இலக்கியங்களில் ஆதிகயிலாயம், குருந்தவனம், சிவபுரம், பராசந்திபுரம், பூலோக கயிலாயம் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இக்கோவில் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. கோவில் வாசலில் அமைந்துள்ள இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக்கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது. இங்குள்ள இறைவன் அரூபமாக வைத்து பூசிக்கப்படுகிறார். எனவே இக்கோவில் மற்ற சிவன் கோவில்களின் அமைப்புகள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் 
வேறுபட்டு விளங்குகிறது.

மூலவர் ஆன்மநாதர்




தில்லையில் ஸ்ரீ நடராஜர் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவதற்கு முன்பு பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், மற்றும் பல முனிவர்கள் இந்த குருந்தவனத்தில் தவமியற்றும் போது, இறைவன் காட்சி தர அவர்கள் பேரானந்தமடைந்து இறைவனிடம் திருநடனக் காட்சியையும் வேண்டிய போது சிதம்பரத்திற்கு வந்து ஆனந்தத் திருநடனக் காட்சியைக் காணுங்கள் என்று அருளினார். அவ்வாரே முனிவர்கள் அனைவரும் தேவர்களுடன் சிதம்பரம் சென்று ஆண்டவனின் ஆனந்த திரு நடனக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் என்பது புராண வரலாறு ஆகும். முனிவர்களுக்கு காட்சி தந்தவர் இக்கோவிலின் மூலவர் ஆகிய ஆன்மநாதர் ஆவார். ஆத்மாவுக்கு நாதராய் விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார்.
எல்லாச் சிவாலயங்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்க்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆன்மநாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங்குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும். இவருக்கு முன் உள்ள படைகல்லில் புழுங்கலரிசி அன்னத்தை ஆவிபுலப்பட பரப்பி, அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலியன வைத்து நிவேதனம் செய்வர். உருவம் இல்லாதவர்க்கு உணவு ஆவியிலுள்ள நறுமணமே உணவாகும்.

அம்பிகை யோகாம்பிகை


அம்பிகை கோவில் கருவறையில் அம்பிகை அரூபமாக விளங்குவதால், உருவத்திருமேனி கிடையாது. ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படும். அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவயோக நாயகி எனவும் போற்றப்படுகிறாள்.

மாணிக்கவாசகர்




தற்போது மக்கள், கோவிலுக்கு வழிபடச் செல்லும் போது, நேராக மூலஸ்தானதிற்குச் சென்று மூலவரை வழிபட்டு விட்டு பின்னர் முதல் பிரகாரம், இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிராகாரம் என்று சுற்றி வருவது போல, நாமும் மூலவர் ஆத்மநாதரை வழிப்பட்டு விட்டு முதல் பிரகாரம் சுற்றி வந்தால் முதலில் நாம் வழிபடுவது மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியாகும் . அடுத்து நாம் காண்பது அம்பாள் யோகாம்பிகை கோவிலாகும். அம்பிகையின் பாதங்களை நாம் கருங்கல் பலகணி வழியாகத்தான் தெரிசிக்க வேண்டும்.

குறுந்த மூலம்



அடுத்து மாணிக்கவாசகரின் மூலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், விமானம் என தனிக் கோவில் போன்று அமைந்துள்ளது. அடுத்து தொடர்ந்து சென்றால் , வெயிலுகந்த விநாயகர், அக்னி தீர்த்தம், எண்ணற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பெரிய பெரிய தூண்கள் ஆகியவற்றைக் காணலாம். 

அடுத்து உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தான் விழாக் காலங்களில் மாணிக்க வாசகார் எழுந்தருளி காட்சி கொடுக்கும் உயரமான மேடை அமைந்துள்ளது. அடுத்து தல விருட்சமான குறுந்த மரங்கள் இரண்டு உள்ளன. இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு ஏற்ப மேடை உள்ளது. அடுத்து வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவற்றில் உள்ள சிற்பங்களைக் கண்டு மகிழலாம்.





ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த்தியாயும் அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன. இறைவன் குருந்தமரமாக விளங்குதல் முதல் சிறப்பாகும். பின்னர் வந்த மாணிக்கவாசகர், குருந்தவன முனிவர்கள் சொற்படி சக்தி பிம்பத்தையே அத்மநாதராக பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார் என்பர்.அடுத்து முதல் பிரகாரத்தில் தொடர்ந்து சென்றால் திருவாசகக் கோவிலையும், நடராஜர் சந்நிதியையும், அதற்கு எதிரில் ஆத்மநாத கூபம் எனப்படும் தீர்த்தக் கிணற்றையும் காணலாம். இதற்கு சிவா தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
இக்கோவிலில் விநாயகர் , முருகன் , நடராஜர், மாணிக்கவாசகர் தவிர வேறு பரிவார மூர்த்திகள் கிடையாது. இரண்டாம் பிரகாரத்தில், தில்லை மண்டபம், பக்தி மண்டபம் முதலியான உள்ளன. தில்லை மண்டபமே நடனசபை என்பர். அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் பல தெய்வங்களின் சிற்பங்களையும் குதிரை வீரர்களின் சிற்பங்களையும் காணலாம்.

தீர்த்தங்கள்

இத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருப்பினும் ஆதியில் உண்டான 9 தீர்த்தங்கள் முக்கியமானவை. அவற்றில் சிவா தீர்த்தம், ஆன்மநாத கூபம் எனப்படும் கிணற்றுநீரை ஆண்மநாதர் அபிஷேகதிர்க்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். அக்னி தீர்த்தம் என்பது ஆலயத்திற்குள் பெரிய குளமாக உள்ளது. இந்த தீர்த்ததைப் பருகினாலும், நீராடினாலும் நினைத்த பயனை அடையலாம். இவை தவிர அறுபத்து நான்கு கோடி தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டி தீர்த்தம் முதலியன இத்தலத்தில் உள்ளன

திருவிழாக்கள்

ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. மாணிக்கவாசகர், இறைவனோடு ஒன்று கலந்த ஆனிமகம் உற்சவம் மிக முக்கியமானது. இத்திருவிழக்களில், மாணிக்கவாசகர் தான் இடபம், திருத்தேர் முதலிய வாகனங்களில் பவனி வருகிறார். இவ்விரண்டு விழாக்களிலும் 9ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

பூஜைகள்

மற்ற பெரிய சிவன் கோவில்களில் நடப்பது போன்றே இங்கும் தினசரி ஆறு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி , குறுந்த மூலம் மற்றும் மாணிக்கவாசகர் சந்நிதி ஆகியவற்றில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இக்கோவிலின் தனிச்சிறப்புகள்

1. உருவம் இல்லாது அருவமாக விளங்கும் ஆத்மநாதர் அதே போன்று யோகாம்பிகை அம்மன்.
2. மாணிக்கவாசகர் சிவமாக திருவுருவம் கொண்டு விழாக்களை ஏற்றருளும் பாங்கு இவருக்கே எல்லா உற்சவமும் நடைபெறுகிறது.
3. இக்கோவிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டிகேஸ்வரர் கிடையாது. பரிவாரத் தேவதைகள் சந்நிதிகள் கிடையாது. இங்கு எல்லாமே ஞானமயம். யோக ஞான மார்கத்தார் பெரிதும் விரும்பும் தலம் ஆகும்.
4. இறைவனே குறுந்த மரமாக விளங்கி, இம்மரதினடியில் இறைவனே மனித ரூபம் கொண்டு எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் அருளி, இவ்விடத்தில் ஆலயம் அமைத்துப் பணிபுரிய கட்டளையிட்டது.
5. திருவிழாக்களில் திருச்சின்னம், சங்கு, மணி ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படும். பிற வாத்தியங்கள் இங்கு உபயோகிப்பதில்லை.
6. நைவேத்தியம் செய்யும் போது, சுவாமி முன்னாலுள்ள பெரிய படை கல்லில் அன்னத்தைப் பரப்பி பட்சண வகைகளை உடன் வைத்து வில்வ தளங்கள் தூவி படைகல்லிற்கு வெளியில் இருந்து, அன்னப்புகைக்கு தீபாராதனை காட்டுகிறார்கள். உருவமில்லாத இறைவனுக்கு அன்னைத்தின் வாசனையே பிரதானம்.
இவ்வாறு பிற சிவன் கோவில்களிலிருந்து இத்தலம் பெரிதும் மாறுபட்டு விளங்குகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள வடக்கூர் (வடநகர்)என்ற ஊரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் முக்கியமானதாகும். திருப்பெருந்துரையில் ஆத்மநாதரை அருவுருவமாக வழிப்பட்ட உருத்திரர்கள், தாங்கள் இறைவனை உருவத்தில் அர்ச்சித்து வழிப்பட விரும்பிய போது பெருமான் இங்கு சிவலிங்கமாக எழுந்தருளினார். அவரே ஆதி கயிலாய நாதர் ஆவார். 

அருவமாக விளங்கும் ஆன்மநாதரையும், அவரே உருத்திரர்களுக்கு உருவமாக காட்சி கொடுத்த வடக்கூர் ஆதி கயிலாயநாதரையும் நாம் வழிப்பட்டு வர, இறைவன் நமக்கு அருள் புரிவாராக என வேண்டுவோம் .

வாழ்க தமிழ்!!!!!!!                   வளர்க பாரதம்!!!!                 வளர்க  சைவநீதி!!!!

Monday, 26 February 2018

பிறவிப்பிணி அறுக்கும் பேரூர்

  சிவ                            தென்நாடுடைய சிவனே போற்றி!!!                               சிவ
                                  எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி!!!
                                                            பேரூரா பட்டீசா!!!




ஆதிகால சிற்ப வேலைபாடுகள், கல்வெட்டுகளை கொண்டது கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இந்த கோயில் முத்தி தலம் என கூறப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தான் தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப் போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம். 


கோயிலில் இறைவன் பட்டீஸ்வர சுவாமி என்றும் இறைவி பச்சைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். சிவன்கோயில் என்றாலும் இங்குள்ள சிற்பங்களில் வைணவ சிலைகளும் உள்ளன. 





ஆஞ்சநேயர், மாயகிருஷ்ணர் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது. கோயிலுக்குள் நுழையும் போதே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிற்ப வேலைபாடுகள் அமைந்துள்ளன. 


பேரூர் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர் என கருதப்படுகிறது.

கோயிலுக்கான வரலாறு இறைவனிடம் இருந்தே துவங்குகிறது. ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலில் சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மகாவிஷ்ணு காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவரது அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டு இருக்கிறார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தாராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அப்போது, நாரத முனிவர் தஷிணகைலாசம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலாபிஷேகம் 




செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய் குலைத்து விட்டது.

கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுத்தமாக பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளை தழும்பை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.  “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டியை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தை காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என அருளினார். இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பட்டீஸ்வரர் திருமுடியில் குளம்படித்தழும்பை இன்றும் காணலாம். 

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் ‘மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது, ஆனி மாதத்தில் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். 



பங்குனி உத்திர தேர்த்திருவிழா, ஆடி, தை, புரட்டாசி அமாவாசை, சூரசம்ஹாரம், சிவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்கள். கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும். 




                     பிறவாப்புளி, இறவாப்பனை, புழுக்காத சாணம்

கோயிலின் முன்பு ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் ‘இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகளை இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

அனைவரும் வாழ்வில் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய திருத்தலம்..

வான்முகில் வளாது பெய்கமலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்ககுறைவிலாது உயிர்கள் வாழ்கநான்மறை அறங்கள் ஓங்கநற்றவம் வேள்வி மல்கமேன்மைகொள் சைவநீதிவிளங்குக உலகம் எல்லாம்.