ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Monday 26 February 2018

பிறவிப்பிணி அறுக்கும் பேரூர்

  சிவ                            தென்நாடுடைய சிவனே போற்றி!!!                               சிவ
                                  எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி!!!
                                                            பேரூரா பட்டீசா!!!




ஆதிகால சிற்ப வேலைபாடுகள், கல்வெட்டுகளை கொண்டது கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இந்த கோயில் முத்தி தலம் என கூறப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தான் தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப் போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம். 


கோயிலில் இறைவன் பட்டீஸ்வர சுவாமி என்றும் இறைவி பச்சைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். சிவன்கோயில் என்றாலும் இங்குள்ள சிற்பங்களில் வைணவ சிலைகளும் உள்ளன. 





ஆஞ்சநேயர், மாயகிருஷ்ணர் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது. கோயிலுக்குள் நுழையும் போதே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிற்ப வேலைபாடுகள் அமைந்துள்ளன. 


பேரூர் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர் என கருதப்படுகிறது.

கோயிலுக்கான வரலாறு இறைவனிடம் இருந்தே துவங்குகிறது. ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலில் சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மகாவிஷ்ணு காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவரது அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டு இருக்கிறார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தாராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அப்போது, நாரத முனிவர் தஷிணகைலாசம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலாபிஷேகம் 




செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய் குலைத்து விட்டது.

கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுத்தமாக பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளை தழும்பை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.  “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டியை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தை காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என அருளினார். இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பட்டீஸ்வரர் திருமுடியில் குளம்படித்தழும்பை இன்றும் காணலாம். 

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் ‘மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது, ஆனி மாதத்தில் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். 



பங்குனி உத்திர தேர்த்திருவிழா, ஆடி, தை, புரட்டாசி அமாவாசை, சூரசம்ஹாரம், சிவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்கள். கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும். 




                     பிறவாப்புளி, இறவாப்பனை, புழுக்காத சாணம்

கோயிலின் முன்பு ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் ‘இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகளை இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

அனைவரும் வாழ்வில் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய திருத்தலம்..

வான்முகில் வளாது பெய்கமலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்ககுறைவிலாது உயிர்கள் வாழ்கநான்மறை அறங்கள் ஓங்கநற்றவம் வேள்வி மல்கமேன்மைகொள் சைவநீதிவிளங்குக உலகம் எல்லாம்.

No comments:

Post a Comment