சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமானது நடராஜர் திருவுருவம் என்று போற்றப்படுகிறது.
இவரது நட்சத்திரம் திருவாதிரை. இது வெப்பமானது. அதற்கேற்ப சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம், கையில் அக்னி, உடலில் சுடுகாட்டுச் சாம்பல் என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார். அவரைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி திருவாதிரையில் அருணோதயகாலப் பூஜை; மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திபூஜை; சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை; ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை; ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை என ஆறுகால பூஜையை நடராஜப் பெருமானுக்கு தேவர்கள் செய்கிறார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே பூவுலகிலும் செய்யப்படுகிறது.
சிதம்பரத்தில் இந்த ஆறு அபிஷேகச் சிறப்பு நாட்களில் மட்டும் நாம் இறைவனை சிற்றம் பலத்தைவிட்டு வெளியே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் காலையிலும் மாலையிலும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கும்; காலை நேரத்தில் ரத்ன சபாபதிக்கும்தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகியவை பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.
மற்ற நான்கு அபிஷேகங்களும் பிற சிவாலயங்களில் நண்பகலில் நடைபெறும். என்றாலும் திருமூலட்டானம் என்பதால் தில்லையில் மட்டும் பொற்சபையில் மாலை வேளையில் நடைபெறுகிறது.
தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான் ராஜசபையில் அருள்பாலிக்கிறார். இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும். அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். இருவரும் அன்று தேரில் பவனி வருவார்கள். திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.
சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும்; திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உண்டு; திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம். இதனை சோமகுல ரகசியம் என்பர். இருவர் சந்நிதி யிலும் ஜன்னல் உண்டு. சிதம்பரத்தில் தொண்ணூற்றாறு கண்களுடைய ஜன்னல் வழியாக காற்று வீசிக்கொண்டிருக்கும். தியாகேசருக்கு ஒற்றைச் சாளரம் மூலமாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும்.
சிதம்பரம் பொற்கோவில்; திருவாருர் பூங்கோவில். சிதம்பரம் ஆகாயத்தலம்; திருவாரூர் ப்ருதிவி (நிலம்) தலம். இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசித்திருக்கிறார்கள்.
மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரம் நடராஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாதத்தை தரிசித்த அவர்கள், பங்குனி உத்திரத் திருநாளில் திருவாரூர் தியாகேசர் திருநடனமாடியபோது அவரது வலது பாதத்தை தரிசித்தார்கள்.
ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடும். திருநெல் வேலி தாமிர சபையில் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டும் காளிகா நடனம். மதுரை மற்றும் திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரிதாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவம், சங்காரத் தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டும். திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இறைவன் புரியும் திரிபுரதாண்டவம் மறைத்தல் தொழிலைக் குறிக்கும். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம் ஐந்தொழிலையும் காட்டக்கூடியது. திருவாலங்காடு தலத்தில் காளிபங்க நடனம்; திருமுண்டீச்சரம் தலத்தில் அழகிய தாண்டவம்; திருவாரூரில் அஜபா நடனம்; ஆனந்தத் தாண்டவ புரத்தில் முகமண்டலத் தாண்டவம்; மதுரையில் கால்மாற்றி ஆடிய நடனம்; பேரூர் தலத்தில் ஊர்த்துவ தாண்டவம் என திருநடனங்கள் பல புரிந்திருக்கிறார் சிவபெருமான்.
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது மூலவர் ஸ்ரீநடராஜரே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளி லும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. அடுத்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங் கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரிவார்கள். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானைப் போற்றும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவில் சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். தம்பதிகள் சுகமான வாழ்வு வாழ்வர். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்கள் மனதில் தைரியமும் உடல் பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.
தில்லையிலும் திருவாரூரிலும் மற்றும் சிவத் திருத்தலங்களிலும் ஆனி உத்திர வைபவம் சிறப்பிக்கப்படுவது போல், பழனி ஆண்டவர் கோவிலிலும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். பழனி ஆண்டவர் எழுந்தருளியுள்ள மலைக் கோவிலில் ஆனித் திருமஞ்சனமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி யன்று அன்னாபிஷேகம் செய்வது போல், அவரது மகனான பழனி முருகனையும் சிவாம்சமாகக் கருதி, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று மதியம் உற்சவமூர்த்திக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. ஆனிமூல நட்சத்திரத்தன்று திருஆவினன்குடி (பழனி மலையடிவாரம்) குழந்தை வேலாயுதருக்கு மாலை பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆனித்திருமஞ்சனம் விசாகத்தன்று நடைபெறும்.
ஆனி மாதத்துக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன. ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் கிருத்திகையும் திருமஞ்சனத்துக்குரிய சிறப்பு நாட்களாகக் கருதப்படுகின்றன. அன்று பஞ்சபூதத் தலங்களிலும், பஞ்சசபைத் திருத்தலங்களிலும், ஸ்ரீநடராஜர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதப் பௌர்ணமியன்று காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும். இறைவன் திருவீதி உலாவரும்போது, மாடியிலிருந்து கூடை கூடையாக மாங்கனிகளை அபிஷேகிப்பார்கள். இந்த மாம்பழங்கள் தெய்வப் பிரசாதமாகக் கருதப்படுகின்றன.
ஆனி மாத தேய்பிறை ஏகாதசியை அபரா ஏகாதசி என்பர். அன்று திருமாலை, திரிவிக்கிரமராகப் பூஜிக்கவேண்டும். இதனால் பிரம்ம ஹத்தி, பொய் சாட்சி சொன்னது, குரு நிந்தனை செய்தது போன்ற பாவங்கள் அகலும். மேலும் புனித நதிகளில் நீராடிய பலன்களும் கிட்டும். ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி எனப்படும். அன்று விரதம் கடைப்பிடித்து, பெருமாளை வழிபட்டால் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் கடைப்பிடித்த பலன்கள் கிட்டும். இந்த ஏகாதசியை பீமா ஏகாதசி என்றும் சொல்வர்.
ஆனி மாத மக நட்சத்திரத்தன்று மாணிக்க வாசகர் மோட்சம் அடைந்ததால், சிதம்பரத்தில் இந்நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது இரவுகள் ஆஷாட நவராத்திரி எனப்படும். இந்த விழா, வடமாநிலங்களில் சில இடங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பாக அமைந்துள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோவில்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கோடைக்கால இறுதி மாதமான ஆனி மாதத்தில் சில கோவில்களில் பழங்களாலான பூஜை சிறப்பிக்கப்படுகிறது. திருச்சி உறையூரில், மேல் கூரையில்லாமல் வெட்ட வெளியில் அமர்ந்திருக்கும் வெக்காளி அம்மன்
திருக்கோவிலில், ஆனி மாதப் பௌர்ணமியன்று மாம்பழங்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். பிறகு, அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவருக்கு (திருக்கோவிலில்) ஆனிப் பௌர்ணமியன்று பக்தர்கள் வாழைப் பழத்தாரினை சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக செழித்துவாழ வேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள்.
ஸ்ரீஆஞ்சனேயர் கோவில்களில் ஆஞ்சனேயருக்கு பழங்களாலான மாலையை அணிவிப்பார்கள். ஆனி உத்திரத்தன்று சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் பலவகைப் பழங்களிலிருந்து பிழியப்பட்ட கனி ரசத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீரங்கநாதருக்கு ஆனி (கேட்டை) ஜேஷ்டாபிஷேகம் மிகவும் போற்றப்படுகிறது. வழக்கம்போல் கோவிலின் வடப்புறம் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் எடுத்து வருவதற்கு பதில், கோவிலின் தென்புறம் ஓடும் காவிரி நதியிலிருந்து தங்கக்குடங்களில் தீர்த்தம் சேகரித்து யானைமேல் வைத்து, பாசுரங்கள் பாடிய வண்ணம் கொண்டுவந்து பெருமாளுக்கு அபிஷேகிப்பார்கள். பிறகு, அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலக்காப்பு நடைபெறும். அதற்கு அடுத்த நாள் பெரிய பாவாடை என்னும் வைபவம் நடைபெறும். பலாச்சுளைகள், மாம்பழங்கள், வாழைப்பழங்கள், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை பிரசாதமாக பெருமாளுக்கு சமர்ப்பிப் பார்கள். இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையன்று தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகமும் அதற்கு அடுத்த நாள் பெரிய பாவாடை வைபவமும் நடைபெறும்.
ஆனி மாதம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் கடைப்பிடிக்கப்படுகிறது. கோவைக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர்- பச்சை நாயகித் திருக் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனும் இறைவியும் நாற்று நடும் திருக்கோலத்தில் தரிசனம் தந்த அடிப்படையில், நாற்றுநடவு உற்சவம் ஆனி திருமஞ்சனத்தன்றுதான் நடை பெறுகிறது.
ஆனி மாத இறைவிழாக்களில் கலந்து கொண்டு ஆன்ம நலம் பெறுவோம்
No comments:
Post a Comment