ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Tuesday 10 May 2016

சிவ சின்னம் - திருநீறு



                    
 பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து

                   கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
                     மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
                      தங்கா வினைகளும் சாரும் சிவகதி
                       சிங்கார மான திருவடி சேர்வரே!9+

சைவர் யார் ?

சிவத்தோடு சம்பந்தமுடையவர்கள் .எப்படி? சிவபெருமானை முழுமுதல் கடவுளாக ஏற்று
திருநீறு ருத்ராட்சம் அணிந்து அஞ்செழுத்து ஓதி இருப்பது ஏன் சிவசின்னம் அணியவேண்டும்?.

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் என்று அப்பரும் திருவெண்ணீ றிடா மூடர் என்று அருணகிரி நாதரும் கூறுகின்றனர் சிவசின்னமாகிய திருநீற்றின் மேன்மை பற்றி மந்திரமாவது நீறு என்று சம்பந்தர் சுவாமிகள் ஒரு பதிகமே நமக்கு அருளியுள்ளார்

பசுவின் சாணம் நச்சுக்கிருமிகளை கொள்ளும் ஆற்றல் கொண்டது ஈயம் பூசிய பாத்திரத்தை
சாணம் சுத்திகரிக்கும் .சாதாரண சாம்பல் செடி கொடிகளிலுள்ள கிருமிகளை ஒழிக்க வல்லது
அப்படி இருக்க விதிப்படி கலாமந்திரம் சம்மிதா
மந்திரங்களை கூறி தயாரிக்கும் திருநீறு பிணி இடர் நோய் நீக்குவதுடன் எல்லா நலன் களையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை

சிவசின்னங்கள் அணிந்த ஒருவர் சிவமாகவே கருதி வழிபடதக்கவர் .இனி பக்தரது திருவேடத்தையும் வணங்க வேண்டும் என்று சிவஞானபோதத்தில் மெய்கண்டதேவ நாயனார் 12ஆம் சூத்திரத்தில் குறிப்பிடுகிறார் அதாவது ஆளை பார்க்காமல் திருநீற்றை சிவபெருமானின் மேனியாகவும் ருட்ராட்சத்தை அவருடைய கண்ணாகவும் நினைத்து வணங்கவேண்டும்

திருநீறு -பாவங்களை நீறாக்குவது , சித்தாந்தப்படி ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களை நீக்குவது . எத்தகையவராயினும் மரணத்திற்கு பின் பிடி சாம்பல் என்பது தத்துவம் .
திருநீற்றின் வேறுபெயர்கள் பஸ்மம், இரட்சை, சாரம், விபூதி, பசிதம் .நமது வழக்கத்தில் உள்ள சொல் திருநீறு ,விபூதி. பூதி என்றால் செல்வம் விபூதி என்றால் மேலான செல்வம் என்று பொருள்

விபூதி எனும் திருநீறு பசுவின் சாணத்தில் இருந்து செய்யப்படுவது .அது தயாரிக்க விதிமுறைகள் ஆகமங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன அதாவது பசுவின் சாணம் இன்ன இன்ன நாட்களில் எடுக்கவேண்டும் எந்த பசுவின் சாணம் விபூதி தயாரிக்க உதவும் என விதிமுறைகளை கூறியுள்ளார்கள்

அணியும் முறை இரண்டு வகைப்படும்
ஒன்று உத்தூளனம் (நீரில் குழைக்காமல் பூசுதல் ) இன்னொன்று திரிபுண்டரம் (முக்குறியாக நீரில் குழைத்து பூசுதல்)

உத்தூளனமாக பூச எல்லா திருநீற்றையும் பயன்படுத்தலாம் அதாவது கோயில்கள் மடங்கள் அடியார்கள் இவர்களிடம் பெற்ற விபூதியை எல்லா நேரமும் உடலில் எல்லா இடங்களிலும் அணியலாம் தீட்சை பெற்றவர்கள் பெறாதவர்கள் அனைவரும் உத்தூளனமாக அணியலாம் .உத்தூளித்து என்று திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் பாடல் 22 இல் மாணிக்கவாசக பெருமான்
                     ஒண்மையனே திருநீற்றைத்
                            தூளித்து ஒளிமிளிரும்
                 வெண்மையனே விட்டிடுதி கண்டாய்
                             மெய்யடியவர்கட்கு
                     அண்மையனே என்றுஞ் சேயாய்
                         பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
                 பெண்மையனே தொன்மை ஆண்மையனே
                               அலிப்பெற்றியனே

முக்குறியாக அணிய கோயில் அபிஷேக பிரசாத விபூதியை பயன்படுத்தக் கூடாது. திருநீற்றை மந்திர ஜெபம் செய்து அணியலாம் (அபிமந்திரித்து ) சந்தியா காலங்களில் மட்டும் அதற்கென வகுக்கப்பட்ட 16 இடங்களில் மட்டும் தரிக்க வேண்டும். தீட்சை பெற்றவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் .சமய தீட்சை பெற்றவர்கள் ஒரு சந்தியும் விசேட தீட்சை பெற்றவர்கள் இரு சந்தியும் நிர்வாண தீட்சை பெற்றவர்கள் மூன்று சந்தியும் கட்டாயம் திரிபுண்டரமாக அணியவேண்டும் .

மேற்சொன்ன செய்திகளை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் முழுநீறு பூசிய முனிவர் புராணம் பாடல் 5 இல்

                இந்தவகையால் அமைத்த நீறுகொண்டே
                 இருதிறமுஞ் சுத்திவரத்தெறித்த பின்னர்
                 அந்தமிலா அரன்அங்கி ஆறுமெய்ம்மை
                  அறிவித்த குருநன்மை அல்லாப்பூமி
                முந்த எதிர்அணியாதே அணியும்போது
              முழுவது மெய்ப்புண்டரஞ் சந்திரனிற்பாதி
                    நந்தி எரி தீப நிகழ் வட்டமாக
                    நாதரடியர் அணிவர் நன்மையாலே

திருநீறு பூசும்போது கடைபிடிக்கவேண்டியது

1. வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும்
2.முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும்
3.வடக்கு கிழக்குமுகமாக நின்று பூசவேண்டும்
4.நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது
5.நித்திரைக்கு முன்னும் பின்னும் குளித்த உடனும் சூரிய உதய அஸ்தமனத்தின் போதும் உணவுக்கு முன்னும் பின்னும் பூசைக்கு முன்னும் பின்னும் மல சல காரியங்களுக்கு பின்னும் பூச வேண்டும்
6.ஆசாரியர் சிவனடியார் இவர்களிடம் விபூதி பெரும் போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும்
7.நந்தி முத்திரை (ம்ருகீ முத்திரை )யால் மட்டுமே எடுக்க வேண்டும்
8.அணியும் போது ஐந்தெழுத்து மந்திரம் கூறி அணியவேண்டும்
திருநீறு பூசும்போது செய்யக்கூடாதது

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது
2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது
4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது
5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்
6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்
8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்
9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது
10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது
11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது
12.விபூதியை கீழே சிந்தக்கூடாது
13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது
14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது
15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது
16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல்

திருநீற்றுக்காகவே இரண்டு நாயன்மார்கள்
தங்கள் உயிரை துறந்தவர்கள்
ஒருவர் ஏனாதி நாயனார், மற்றொருவர் மெய்ப்பொருள் நாயனார்

கற்பம்,அனுகற்பம்,உபகற்பம் என்று மூன்று வகை விபூதிகள் மட்டுமே பஞ்சபிரம்ம மந்திரம் சொல்லி தயாரிக்கப்பட்டது. அஷ்டமி நவமி சதுர்த்தசி திதிகளில் எடுக்கவேண்டும் என்பது போன்ற ஆகம விதிப்படி தயாரிக்கப் பட்டது இவை சைவ விபூதி எனப்படும். முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் எனக்கூறப்படுவது இந்த முறை விபூதி தான். முழு பலனும் தரக்கூடியது என்று பொருள்

அகற்ப விபூதி என்பது விதிமுறைக்கும் அப்பாற்பட்டது அசைவ விபூதி எனப்படும் இது தாரணத்திற்குஉகந்தது அல்ல.பலன் இல்லை அதனாலேயே கடையில் விலைக்கு வாங்கி பூசக்கூடாது

திருநீறு அணியும் இடங்கள்

தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்

திருநீற்றை வீட்டில் அதற்கென ஒரு கிண்ணம் அல்லது மண் பாத்திரம் வாங்கி அதில் போட்டு வைக்கவேண்டும் அதற்க்கு திருநீற்றுகோயில் அல்லது பஸ்மாலயம் என்று பெயர் அதையே சிவலிங்கமாக பூசிக்கலாம் இதற்கு சணிகலிங்கம் என்று பெயர்.திருமுறைகளில் திருநீற்றின் மேன்மைகள் பல இடங்களில் பாடப் பெற்றுள்ளது

எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாத அரசியல் கட்சி சின்னங்களையும் கட்சித் தலைவனின் படத்தையும் கூசாமல் அணியும் மனிதவர்க்கமே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் திருநீற்றை அணிந்து பேறு பெறுவோம். சிவசின்னங்களை அணிய நாம் கூச்சப்பட்டால் சிவபெருமான் நம்மைப்பார்க்க கூசுவார்.திருநீறணிந்தால் எல்லா வளமும் நலமும் ஒருங்கே கிடைக்கும் .சிவசின்னம் அணிந்து சிவவேடம் என்பது சிவபெருமானால் மட்டுமே அருளமுடியும் .அந்த கொடுப்பினை எல்லோர்க்கும் கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவாராக

எனவே தினமும் திருநீறு பூசி திருநீற்றுப்பதிகம் பாடினால் நம் வினைப்பயன் அழியும் என்பது கண்கூடாக பலபேர் அனுபவித்த உண்மை

போற்றி ஓம் நமசிவாய

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment